இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே மாதம் 3ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் லாவ் அகர்வால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்பு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று நாள்களில் இரட்டிப்பாகிவந்தது. ஆனால், கடந்த ஏழு நாள்களாக வைரஸ் இரட்டிப்பாக 6.2 நாள்கள்வரை ஆகிறது. மேலும், 19 மாநிலங்களில் வைரஸ் பரவலின் வேகம் என்பது தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது.
புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடுவரை குறைந்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் இரண்டாம் தேதிவரை வைரஸ் பரவலின் வேகம் 1.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது. முன்னதாக மார்ச் 15 முதல் 30 வரையிலான தேதிகளில் இது 2.1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றார்.
தற்போது இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைவோரின் விகிதம் 13.06 விழுக்காடாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது மற்ற நாடுகளைவிட அதிகம் என்றும், குணமடைவோரின் விகிதத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் 1.73 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,800 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுடன் 1,919 கோவிட்-19 சிறப்பு மருத்துவமனைகள் தயார் நிலையிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடவடிக்கைகள் சிறப்பு; ராகுல் பெருமிதம்