கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டெனியா தனியார் விடுதியில் தான் பிரதமர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேசியப் பாதுகாப்பு கழகத்தின் ஆலோசகராக பணியாற்றி வருவதாகக் கூறி அன்கித் டே (வயது 22) என்பவர் தங்கும் அறை கேட்டுள்ளார்.
ஆனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விடுதியில் பணியாற்றும் நபர் ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கையில், அவ்வாறு ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியவேயில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர், குப்போன் பூங்கா காவல் நிலையத்தில் அன்கித் டே குறித்து புகார் அளித்ததன் பேரில், ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் வைத்திருந்த பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அச்சடிக்கப்பட்ட போலி அடையாள அட்டையும், சுய விவர அட்டைகளும் ( விசிட்டிங் கார்டு ) பறிமுதல் செய்யப்பட்டன.
அந்நபர், தனியார் விடுதிகளில் வேறு எவ்வித சலுகைகளும் கேட்கவில்லை என்றும் விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.