இரண்டு மாத கால ஊரடங்கின்போது குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட துயரம் மனித இனத்தின் சோகமான வரலாற்றுச் சுவடுகளாகும். உலகையே அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் (தீநுண்மி) கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரம் அடைய தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
கரோனா பரலைக் கட்டுப்படுத்துவதே நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசு, குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் இருக்கும் இடங்களிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டது. அரசின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர்களும் நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு தாங்கள் வேலை பார்த்துவந்த இடத்திலேயே கையிருப்புகளைக் கொண்டு நாள்களைக் கடத்திவந்தனர்.
![பெயர் பதிவுசெய்ய காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-migrantlabourers-protest-vis-7204381_21052020110451_2105f_00572_1071_2105newsroom_1590076027_1046.jpg)
ஒருபுறம் நாட்டில் கரோனாவின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்ல மத்திய அரசும் ஊரடங்கை மேலும் மேலும் நீட்டித்துக்கொண்ட சென்றது. ஏற்கனவே, அத்தியாவசிய தேவைகள்கூட சரிவர கிடைக்காமல் தவித்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள், பொறுமை இழந்து இறுதியாக, தங்களது சொந்த ஊருக்கு நடைபயணமாகவே செல்லத் தொடங்கினர்.
அவர்களின் ஒட்டுமொத்த குரலும்... கரோனா தங்களைக் கொல்வதற்கு முன்பு, ஊரடங்கால் உணவின்றித் தவிக்கும் தங்களைப் பசி கொன்றுவிடும் என ஒருமித்து ஒலித்தது.
லட்சக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு ஒருவழியாகச் சிறப்பு ஷ்ராமிக் ரயில்களை மே மாதம் தொடக்கத்தில் இயக்கியது. இது குறித்து செய்தி வெளியிட்ட மத்திய அரசு, மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் சிறப்பு ரயில் மூலம் சுமார் 35 லட்சம் பேரும், பேருந்து மூலம் 40 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
மேலும் 36 லட்ச தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அடுத்த பத்து நாள்களில் இரண்டாயிரத்து 600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தது.
![சொந்த ஊருக்கு செல்ல ஒன்றுகூடிய தொழிலாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7363550_dfd.jpg)
இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில், பெண்கள், குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் அளிக்க வேண்டும். பயணிகளின் உடல்நலத்தைக் காத்து, சுகாதாரமான முறையில் அவர்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முன்னேற்பாடுகளைச் செய்துதர அறிவுறுத்தியது.
இந்த வழிகாட்டுதல்களைச் சொல் அளவிலேயே பின்பற்றியதன் விளைவு, டெல்லியிலிருந்து பிகார் சென்ற ரயிலில் வைக்கப்பட்டிந்த உணவுப் பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்டவை திருடுபோயின. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் 10 முதல் 20 மணி நேரம் வரை குடிக்க நீர்கூட இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பொதுமான முன்தயாரிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில ரயில்கள் 30 முதல் 40 மணிநேரம் தாமதமாக பல ஊர்களுக்குச் சென்றடைந்தது. ஊரடங்கால் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த குடிபெயர் தொழிலாளர்களை இதுபோன்ற சம்பவங்கள் பெரிதும் பாதித்தன.
நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் தொழிலாளர்களை இதுபோன்று அலைக்கழிக்கவைப்பது சரியான அணுகுமுறையா? என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
![பேருந்தில் ஏற போட்டிபோடும் தொழிலாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7363550_image.jpg)
குடிபெயர் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தைத் தேடி டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவில் குடிபெயர்ந்து செல்கின்றனர்.
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 14 கோடி குடிபெயர் தொழிலாளர்கள் உள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 90 லட்சம் பேர் குடிபெயருவார்கள் என்று 2017ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சொந்த ஊரைவிட்டு பிற மாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் உளவியல் சார்ந்த அச்சம் என்னவெனில், சொந்த பந்தங்களின்றி, ஊர் பெயர் தெரியாத இடத்தில் நோய்வாய்ப்பட்டோ, பட்டினியாகவோ, அனாதையாகவோ இறப்பதைவிட எவ்வளவு சிரமங்களை அனுபவித்தேனும் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்பதே.
![சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7363550_fdf.jpg)
இப்படிச் சொந்த ஊருக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்லும் தொழிலாளர்கள், தீவினையாக சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்தன. நீண்டதூரம் நடந்துசென்ற அசதியால் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறி விபத்துக்குள்ளான சோகமும் நம் நாட்டில் அரங்கேறியது. இதில் மட்டும் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கித்தவித்த தனது தந்தையை மீட்க 1,200 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று அழைத்துவந்த பள்ளி மாணவியின் வீர செயல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்காவின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு நாட்டில் குடிபெயர் தொழிலாளர்கள் இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.
மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் 30 விழுக்காடு தொழிலாளர்கள்கூட, இன்னும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் இரண்டு லட்சம் குடிபெயர் தொழிலாளர்கள் 140 சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்குமாறு மாநில அரசிற்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கண்ணியத்துடன் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.
இதையும் படிங்க: சீரான வானிலை... விண்வெளிக்கு பறக்கவிருக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்