மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சுதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்.
மாணவன் தற்கொலை
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சுதீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
டைரியில் திடுக்கிடும் தகவல்கள்
இதையடுத்து, மாணவன் தற்கொலை செய்துகொண்ட விடுதி அறையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு குறிப்பேடு ஒன்று கண்பிடிக்கப்பட்டது.
அதில், பல திடுக்கிடும் தகவல்கள் இருந்தைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த டைரியில் சுதீப், "என்னை சக மாணவர்கள், விடுதி காப்பாளர், விடுதி காவலர் ஆகியோர் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்திவருகின்றனர்.
நரக வேதனை
இந்த வேதனையை கடந்த ஓராண்டாக அனுபவித்துவருகிறேன். மேலும் இரவு முழுவதும் என்னை தூங்க விடாமல் பாலியல் வன்புணர்வு செய்துவருகின்றனர். இதனால் பல நாள்கள் தூங்காமல் பள்ளிக்குச் சென்று உறங்குகிறேன். என்னை இந்த நரகத்தில் விடுவிக்க யாரேனும் வராமாட்டார்களா?" என்று மிகுந்த மனவேதனையுடன் அதில் கூறியிருந்தார்.
இது குறித்து சுதீப் தனது தந்தையிடம் தெரிவித்தபோது அவர் வேறு அறைக்கு மாற்றிவிடுவதாகக் கூறியதையும் குறிப்பேட்டில் குறிப்பிட்டிருந்தார்.
பிறந்தநாளிலும்...
மேலும், கடந்த 15ஆம் தேதி சுதீப்பின் பிறந்தநாளன்று இரவு சக மாணவர்கள் அவரை வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளதையும் வேதனையுடன் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தினம்தினம் நரகவேதனையில் புழுவாய் துடிப்பதைவிட தனது இன்னுயிரை மாய்த்துவிட எண்ணிய சுதீப் மனதை திடப்படுத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 பேர் மீது போக்சோ
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சுதீப்பை பாலியல் வன்புணர்வு செய்த சக மாணவர்கள், விடுதி காப்பாளர், விடுதி காவலர் உள்பட 14 பேர் மீது போக்சோ, பிரிவு 377இன்கீழ் (இயற்கை ஒழுங்கிற்கு எதிரான செயல்) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: