ஒரு மாத காலத்திற்கும் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராடிவரும் போராட்டக்காரர்களைக் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்க்கிறோம்.
இச்சட்டங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன. நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் மக்களிடம் நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதராங்களைக் கொடுங்கள் என்று கேட்க எவருக்கும் உரிமை இல்லை. கெஜ்ரிவால் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமைதி காப்பதை ஆராய்ந்தால், அவர் யாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் என்பது புரியும்.
டெல்லி காவல் துறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தை டெல்லியில் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தியிருந்தால் டிஎஸ்பி தவிந்தர் சிங், பயங்கரவாதிகளுடன் உலவ முடியுமா?. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதியாமல் போராட்டக்காரர்களை ஷாகின் பாக் பகுதியிலிருந்து கலைந்துபோகக் கூறுவது சரியல்ல” என்றார்.
முன்னதாக, தனது மனைவியுடன் போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், போராட்டக்காரர்கள் மத்தியில் பேச விரும்பினார். ஆனால், போராட்டக்கார்கள் 'இது ஒன்றும் அரசியல் மேடையல்ல' என்று கூறி அவரைப் பேச அனுமதிக்கவில்லை.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிணைந்த பெண்கள்!