குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் டெல்லி தாராகஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகக் கூறி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பலமுறை சிறை சென்றாலும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் தொடர்ந்து எதிர்ப்பேன்.
அரசியலமைப்புச் சட்டத்தை அரசு மதிக்க வேண்டும். புறக்கணிக்கக் கூடாது. நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம். அதை எதிர்ப்போம். அரசியலமைப்பை புறக்கணிக்கும் விதமாக உள்ள சட்டத்தை அரசு பல காலமாக இயற்றிவருகிறது. வலுவிழந்த அரசியலமைப்பு நாட்டுக்கு நல்லதல்ல. ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமான சம்பவம்.
மாணவியர்களைக் காவல் துறையினர் தாக்கியிருக்கக் கூடாது. பாகுபாடு காட்டும் விதமாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'வேதனையில் இருக்கிறோம்... அரசியல் செய்ய வேண்டாம்' - பாஜகவுக்கு கெஜ்ரிவால் அறிவுரை