கரோனா பெருந்தொற்று பல்வேறு தரப்பினரை பாதிப்புக்குள்ளாக்கிய நிலையில், பொருளாதார மந்தநிலையால் லட்சக்கணக்கானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். இந்தக் காலக்கட்டத்தில், வேலை இழந்தோருக்கு பணி வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர்களை டெல்லி காவல் துறை கைதுசெய்துள்ளது.
பாலம் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 2017ஆம் ஆண்டிலிருந்து தான் சொமேட்டோவில் பணிபுரிந்துவந்ததாகவும் பெருந்தொற்று காலத்தில் வேலையை இழந்ததாகவும் அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்புகாரில், "பணியைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது, ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாகக் கூறி எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது.
தன்விவரகுறிப்புடன் 1,875 ரூபாய் அனுப்பினேன். பின்னர், சீருடை உள்ளிட்டவற்றுக்கு மேலும் பணத்தைச் செலுத்த வேண்டும் என அவர்கள் கேட்டனர். அப்போதுதான் எனக்குச் சந்தேகம் எழுந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், தேடுதல் வேட்டை மேற்கொண்ட காவல் துறையினர் ஒரு பெண் உள்பட மூவரை கைதுசெய்துள்ளனர். இதற்குப் பின்னணியில் உள்ள கும்பலைப் பிடிக்க, காவல் துறை தொடர் விசாரணை மேற்கொண்டுவருகிறது.