கரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை இம்மாத தொடக்கத்தில் தொடங்கியது. ஆனால், இதில் பயணம் செய்வதற்காகத் தொழிலாளர்களிடம் அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி இலவச பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துவருகிறது.
அந்தவகையில், வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள், உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்து வருவதற்காகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தார்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அந்த பேருந்துகளின் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், உத்தரப் பிரதேச அரசாங்கம் அந்த பேருந்துகளை மாநில எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதியளிக்கவில்லை.
பேருந்துகளின் பட்டியலை உத்தரப்பிரதேச அரசாங்கம், காங்கிரஸிடம் கேட்டது. இதனையடுத்து, பிரியங்கா காந்தியின் தனிச் செயலாளர் பேருந்துகள், அதன் ஓட்டுநர்கள் பற்றிய விவரங்களை வழங்கினார்.
இதனிடையே, இந்த பேருந்துகள் தொடர்பாகத் தவறான தகவல்கள் அளித்ததாகக் கூறி அவர் மீது லக்னோவில் உள்ள ஹஜ்ராட்கன்ஞ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லாலுவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ‘புலம்பெயர்ந்தோரின் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’ - பிரியங்கா காந்தி