ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் உள்ள கோட்டா-தவுசா நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மேஜ் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 28 பேரில் 24 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து லாகேரி உதவி ஆய்வாளர் ராஜேந்திர குமார் கூறுகையில், "பேருந்து 28 நபர்களுடன் திருமண விருந்திற்காக அதிகாலை கோட்டாவிலிருந்து சவாய் மாதோபூருக்குச் சென்றுள்ளது. அப்போது, லேகாரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாப்டி கிராமத்திற்கு அருகே ஒரு பாலத்தில் பயணிக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. விபத்து நடைபெற்ற பாலத்தில் தடுப்புச் சுவரும் இல்லை.
இந்த விபத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள், மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கிராமத்தில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்" என்றார்.
இதையும் படிங்க:ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!