பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக அறியப்படுவது புல்லட் ரயில் திட்டம். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளது.
இத்திட்டம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக தடைப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், 508 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த புல்லட் ரயில் திட்டத்தில், சுமார் 237 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தை கட்டுவதற்கான முக்கிய டெண்டர் நேற்று (அக்டோபர் 19) விடப்பட்டது. இந்த டெண்டரில் ஆஃப்கான்ஸ், டாடா, எல் & டி ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன.
நான்கு ரயில் நிலையங்களின் கட்டுமானத்தை உள்ளடக்கிய அதிமுக்கிய டெண்டரை எல் & டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த டெண்டர் புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த பணிகளில் 47 விழுக்காடு பணிகளை உள்ளடக்கியதாகும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் மிகப் பெரிய டெண்டராக கருதப்படும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க: பண்டிகை காலத்தை முன்னிட்டு 196 சிறப்பு ரயில்கள் இயக்கம்!