மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வங்கதேசம் எல்லைக்கு அருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை சோதனை செய்ததில், சந்தேகத்திற்கிடமான மார்க்கிங் கொண்ட வரைப்படமும், போதைப்பொருள்களும், 500 யாபா மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த பிஎஸ்எஃப், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ஆகியவற்றுக்கு தகவல் அளித்தது.
பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஸ்வரூப்நகரில் வசிக்கும் ருஹுல் மொண்டல் மற்றும் பாரூக் மொல்லா என்பதும், அப்பகுதி மக்கள் தான் இவர்களை எல்லையில் காத்திருக்க சொன்னதும் தெரியவந்தது.
இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தேடும் பணியில், எஸ்.எஃப் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.