டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிர வைத்தது. இதனால், காற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அதுவும் நான்கு விதமான பிளேவர்களில் காற்று விற்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
தெலங்கான மாநிலம் ஹைதராபாத் எல்.பி. நகரைச் சேர்ந்தவர் தோயப்பாடி ராமு. இவர் பூ கன்று, மரக் கன்றுகளை விற்பனை செய்து வருகிறார். மேலும், இவர் செய்து வரும் செயலைக் கேட்டால் நமக்கும் இதுபோன்று செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிடும். தோயப்பாடி ராமு, தனது பூந்தோட்டத்திற்கு மட்காத பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வரும் நபர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.
தெருக்களில் கிடக்கும் குப்பைகளை எடுத்து தன்னிடம் கொடுங்கள் என்ற வாசகத்தையும் எழுதி குப்பைக் கிடங்காக கிடக்கும் ஹைதராபாத்தை மாசற்ற நகராக மாற்ற முயற்சித்து வருகிறார். இதுகுறித்து தோயப்பாடி ராமு கூறுகையில், இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நம் நகரத்தை நாம் நேசிப்போம். குப்பையில்லா நகரமாக மாற்றவேண்டியது நமது கடமை. டெல்லியில் ஏற்பட்டதுபோல் ஹைதராபாத் நகரம் மாறக்கூடாது. குழந்தைகளும் ஆர்வத்துடன் பிளாஸ்டிக் குப்பைகளை தந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். இந்தக் குப்பைகளை ரீசைக்கிள் செய்து வருகிறோம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இவரது செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். இதேபோன்று நாங்களும் எங்கள் பகுதிகளை குப்பையில்லா தெருவாக மாற்றுவோம் என தெரிவித்து வருகின்றனர்.