முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக நுகர்வில் சுணக்கம் ஏற்பட்டு தனியார் முதலீடுகள் முடங்கியுள்ளன. இதை சரி செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூகம் சார்ந்த கொள்கை வரைவுகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயல்பாடுகள் அச்ச உணர்வை ஏற்படுத்தி புதிய தொழில்முனைவோர்கள் வருகையைத் தடுக்கிறது. பொது மக்கள் மத்தியில் சுதந்திர அமைப்புகளான ஊடகம், நீதித்துறை, விசாரணை அமைப்புகள், ஒழுங்குமுறை ஆணையங்களின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளன. நம்பிக்கையின்மை, அச்சம், தவறான கொள்கை ஆகிய இனைந்து இந்தியப் பொருளாதார வளர்ச்சியை நசுக்கி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சிக்கலுக்கான முகாந்திரங்களாக மன்மோகன் கூறும் பட்டியல்
- 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் குறைவு
- 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு
- 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நுகர்வில் சுணக்கம்
- வரலாறு காணாத வாரா கடன்
- 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மின் உற்பத்தியில் சுணக்கம்
மேற்கண்ட சிக்கல்களை விரைந்து சரி செய்து பொருளாதாரத்தை வளர்ச்சியின் பாதையில் மீட்டெடுக்க மக்களிடம் நம்பிக்கையான சூழலை மோடி அரசு உருவாக்க வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பொருளாதார மேதை!