கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் சில தளர்வுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, மதுபானக் கடைகளை திறப்பதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.
நேற்று, குறிப்பட்ட இடங்களில் உள்ள மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டதால் சமூக இடைவெளி காற்றில் பறந்தன. கடைக்கு முன்பு மதுப்பிரியர்கள் வரிசையாக நிற்கத் தொடங்கினர். இதனால், அதிருப்தியடைந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால், மீண்டும் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் எனவும் எச்சரித்தார்.
இதுகுறித்து டெல்லி மாநில நிதித்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "மக்களின் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கத்திலும், கரோனாவால் சரிவைக் கண்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் சிறப்பு கரோனா வரி அமல்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, மதுபானங்களின் விலையைப் பாட்டிலுக்கு 70 விழுக்காடு அதிகரித்துள்ளனர். கடைக்காரர்கள் சேகரித்த சிறப்பு கரோனா கட்டணத்தை வாரந்தோறும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விற்பனை டேட்டாவை மதுபானக்கடை விற்பனையாளர்கள் சரியாகப் பராமரிக்க வேண்டும். மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: குறையும் கச்சா எண்ணெய் விலை - அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!