ஊரடங்கு உத்தரவால் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையிலும், பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்திய விமான நிலைய ஆணையம் சுருக்கமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விமானப் போக்குவரத்திற்கான முன்பதிவு குறித்து மத்திய அரசு அலுவலர்கள் ஈடிவி பாரத்திற்கு அளித்த தகவலின்படி, நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் செயல்பாட்டில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், மூன்றில் ஒரு பங்கு விமான சேவைகள் தொடங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இறுதி முடிவுகள் அனைத்தும் நாளை நடக்கவுள்ள விமான நிறுவன நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை தொடங்கப்படுவது குறித்து பேசிய ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், ”விமான சேவை தொடங்கப்படுவது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று. நாங்கள் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தயாராகவுள்ளோம். பயணிகளுக்குப் பாதுகாப்பான, விரைவான பயணத்தை அளிப்போம். ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளது. பயணத்தின்போது கட்டாயமாக தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்படும்” என்றார்.
இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ”கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கான விதிமுறைகளை இன்னும் சில தினங்களில் வெளியிட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!