புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர், கடந்த இரண்டு நாட்களாக, கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டதால் மீன் பிடிக்கச் செல்லாமல் தனது படகை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார். புதுச்சேரியில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட்.4) காலை அவர் துறைமுகத்துக்கு வந்து பார்த்த பொழுது, அவரது படகு கடலுக்குள் மூழ்கி கொண்டிருந்தது. அருகிலுள்ள மீனவர்களும் படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. கடல் நீர் புகுந்ததால் படகின் இயந்திரங்கள் பழுது அடைந்து இருப்பதாகவும், இதனால் ஒட்டு மொத்தமாக 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக, படகு உரிமையாளர் கருணாகரன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.