தெற்கு மும்பையில் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டடம் மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம் கடந்த வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து மும்பை மாநகராட்சி ஆணையர் அஜோய் மேத்தா தலைமையில் நேற்று அவசர கால கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சமர்பிக்க அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இடிந்த நடைமேம்பாலம் முழுவதுமாக அகற்ற மும்பை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்பின்னரே அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படும்", என்றார்.