உத்தரா கண்ட் மாநிலத்தில் உருவாகும் யமுனை நதி டெல்லி, ஹரியானா வழியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கையில் கலக்கிறது. இந்த யமுனை நதி தான் தலைநகர் டெல்லிக்கான நீர் ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் யமுனை நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்போவதாக ஹரியானா அரசு அறிவித்தது.
இது குறித்து டெல்லி நீர் வாரியம் அதிகாரி கூறுகையில், "டெல்லிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதியில் தடுப்பணை கட்டுவதால், தலைநகர் டெல்லியில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்.
யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு குடிநீருக்காக தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அதனால் டெல்லிக்கு தண்ணீர் வருவதை ஹரியானா அரசு தடுத்து அணை கட்டினால் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்" என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து மத்திய, ஹரியானா அரசுகளுக்கும், டெல்லி தலைமைச் செயலருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.