அசாம் முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருன் கோகாய் நேற்று தனது கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனா நடத்தினார். வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறும் அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தருண் கோகாய், நாட்டில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை காக்கும் வகையில் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும் கொரோனா வைரஸை விட பாஜகவின் மதவாத வைரஸ் கொடியது எனவும் தெரிவித்தார்.
பாஜகவின் மதவாதம் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி பிளவுகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள தருண் கோகாய், தங்கள் கட்சி மக்கள அனைவரும் அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் சூழலை ஏற்படுத்தும் என உறுதியளித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 15 வருடங்களாக முதலமைச்சராக இருந்த தருண் கோகாய் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் தோல்லியடைந்தது. பாஜக சார்பில் அம்மாநில முதலமைச்சராக சர்பானந்த சோன்வால் தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆட்சி நடத்திவருகிறார்.
இதையும் படிங்க: பாரதிய ஜனதா சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி: மாநிலத் தலைவர் எல். முருகன்