பெங்களுருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி ஆட்சியில் இருந்தபோது என்ன நடந்தது? பாஜக அரசியலமைப்பை தவறாக பயன்படுத்துகிறது. மாநிலத்திலும் (கர்நாடகா) மத்தியிலும் ஆட்சி அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மிகவும் முக்கியமான காலகட்டம், பாஜகவுக்கு பாடம் கற்பிக்கப்படும்.
15 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மக்கள் கட்டாயம் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள். இடைத்தேர்தலில் வெல்ல பாஜகவினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கிறார்கள். மதவாதம் தூண்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடகாவை பிடிக்கவில்லை. அவருக்கு எடியூரப்பாவை பிடிக்கவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பாஜகவினர் ஆட்சிக்கு வந்ததும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் இதுவரை இழப்பீடு கொடுக்கவில்லை. பொய்யான வாக்குறுதி மற்றும் பணம் கொடுத்து வாக்காளர்களை பாஜகவினர் குழப்பி வருகின்றனர், மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என்றார்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “கட்சியின் தலைமைக்கு சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதில் உடன்பாடு இல்லை. தொடர்ந்து ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வற்புறுத்தலின் பேரில் கூட்டணி அமைக்கப்பட்டது”என்றார்.
கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 5ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. முடிவுகள் 9ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெரும்பட்சத்தில் அங்கு மீண்டும் காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: சித்த ராமையா, குமாரசாமிக்கு, கர்நாடக முதலமைச்சர் எச்சரிக்கை.!