அஸ்ஸாமில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் அம்மாநிலத்தில் மக்கள் ஆதரவை தொடர்ந்து தக்கவைக்க அக்கட்சியினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தை ஆளும் பாஜகவின் சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசியத் தலைவர்கள் தொடர்ந்து அஸ்ஸாமில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியில் நேற்று (ஜன. 11) பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருக்கு அங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், 'அஸ்ஸாமின் பண்பாட்டை, மொழியைப் பாதுகாக்க பாஜக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அஸ்ஸாமின் தனித்துவமான கலாசாரம் மற்றும் மொழியை, பாஜக எப்போதும் நன்கு கவனிக்கும். பாஜகவின் மூத்தத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் தான், தேசிய அளவில் அஸ்ஸாம் இயக்கத்தை ஆதரித்த முதல் தலைவர் ஆவார்.
காங்கிரஸ் தலைமையிலான யூ.பி.ஏ. அரசு அஸ்ஸாம் வளர்ச்சிக்காக அதிகப்பட்சமாக ரூ.50,000 கோடி மட்டுமே ஒதுக்கியது. பிரதமர் மோடி அரசானது, ரூ.3 லட்சம் கோடி வழங்கியுள்ளது. தாமரை இந்தியா முழுவதும் மலர்ந்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலம், இந்தளவிற்கு முன்னேறி இருப்பதற்கு என்.டி.ஏ அரசின் ஒத்துழைப்பே காரணம்.
ஐம்பது ஆண்டுகாலமாக நீடித்துவந்த போடோ பிரச்னைக்கு சமாதான ஒப்பந்தத்தின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீர்வளித்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் நிலப்பிரச்னையையும் எங்கள் அரசு தீர்த்தது.
2016ஆம் ஆண்டில் அஸ்ஸாமில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல், ஜில்லா பரிஷத் தேர்தல், பிராந்திய கவுன்சில் தேர்தல், போடோ பிராந்திய கவுன்சில் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என அனைத்திலும் மக்கள் பாஜகவை ஆதரித்தனர். இந்த ஆதரவு எதிர்வரும் தேர்தல்களிலும் தொடரும்.
அஸ்ஸாமில் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப்பின்பு கோடிக்கணக்கான கழிப்பறைகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க : இணை அமைச்சரின் வாகனம் விபத்து... மனைவி உள்பட இருவர் உயிரிழப்பு!