மேற்கு வங்க மாநிலத்தில் மே 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள சில தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கொல்கத்தா நகரில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினார்.
ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணியில், திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் அமித்ஷாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் மோதிக்கொண்டனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவினர் மம்தா பானார்ஜியையும், திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவையும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், இந்த வன்முறை சம்பவத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதேபோன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் மாலை ஐந்து மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது.