மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியால், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி கட்டாயம் வெற்றிபெற்று தன் பலத்தை நிரூபிக்கும் பொருட்டு, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிட தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்துள்ளது. பாஜக கட்சி சிவசேனாவுடன் கூட்டணி வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் எனக் கூறினார்.
இதுகுறித்து மக்களவை உறுப்பினர் அசாதுதின் ஒவைசியிடம் கேட்டதற்கு அவர், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி;த் தர அவர்களால் (பாஜக&சிவசேனா கூட்டணி) முடியவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியை மறைத்து இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அவர்கள் மதவாதத்தை கையிலெடுத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும் முன்னரே உத்தவ் தாக்கரே, அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதை எப்படி முடிவு செய்கிறார் என்பது தெரியவில்லை என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
ஒவைசியின் தலைமையிலான அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி, மஹாராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவையில் புதிதாக களமிறங்கி இரண்டு தொகுதிகளை கைப்பற்றிருந்தது. வரும் தேர்தலில் 24 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடப் போவதாக ஒவைசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : சிதம்பரத்துக்கு பெயிலா? திகாரா?