மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் இதனை உங்களிடம் பேச விரும்புகிறேன். சிலர், மகாத்மா காந்தி குறித்து பேசுகின்றனர். ஆனால் அவரின் சிந்தாந்தத்தை நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல விரும்பவில்லை. உங்கள் மனதில் உண்மையில் என்ன இருக்கிறது.? மகாத்மா காந்தியை சொந்தம் கொண்டாட, அவரின் பெயரை எடுத்துக்கொள்ள உங்களுக்கு ஏதேனும் சுய ஒழுக்கம் உள்ளதா.?
நாடு 70 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.
மக்கள் ஜனநாயகத்தைக் காக்க போராடுகின்றனர். ஆனால் நரேந்திர மோடி என்ன செய்கிறார். அமெரிக்க சென்று, "ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார்" (ட்ரம்ப் அரசு அமைப்போம்) என்கிறார். இவ்வாறு நடிகர், நடிகையர், நடனக் கலைஞர்கள்தான் செய்வார்கள்.
முதலில் நரேந்திர மோடி உண்மையை பேச கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் ஒருபோதும் உண்மையை பேச மாட்டார். உண்மை காங்கிரசுக்கு சொந்தமானது. காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் உண்மையை மட்டுமே பேசுவார்கள்.
ராகுல் காந்தி நல்ல மனிதர். நாட்டு மக்கள் காந்திய கொள்கையை நம்புகின்றனர். ஆனால் பாரதிய ஜனதாவினரோ பணத்தை நம்புகின்றனர். பணம் இருந்தால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என எண்ணுகின்றனர்.
நாட்டில் தற்போது என்ன நடக்கிறது? வேலை இல்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதல பாதாளத்தில் பொருளாதாரம் விழுந்து கிடக்கிறது. அரசியல் பழிவாங்கல் நடக்கிறது. அரசுக்கு எதிராகப் பேசினால், சிறை என்ற நிலை உள்ளது.
அடுத்த தோ்தலில் நரேந்திர மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காந்தியின் நற்பெயரை எடுத்துக் கொள்ள துடிக்கும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தன்னுடைய தவறுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.