இந்தியாவில் உள்ள சுமார் 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இத்திட்டம் இதுவரை புதுச்சேரியில் அமல்படுத்தப்படவில்லை.
இதனைக் கண்டித்து பாஜகவினர், புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு நடுத்தர மக்கள், ஏழை மக்களுக்கு இத்திட்டத்தை நிறைவேற்றாமல் புதுச்சேரி காங்கிரஸ் துரோகம் விளைவிப்பதாகவும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தியும் அரசு மருத்துவமனை எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அமல்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், ‘ இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்தவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்தார்.