புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அரும்பார்த்தபுரம். இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே பல்வேறு பிரச்னைகள் காரணமாக மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் கட்டிமுடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள அரும்பார்த்தபுரம் பாலத்தை கட்ட வலியுறுத்தி புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது கட்டுமானப் பொருட்கள் உடன் வந்திருந்த அவர்கள் சிமெண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களுடன் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேம்பாலம் கட்டுமானப் பணிகளை கிடப்பில் போட்டுள்ள அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், மேம்பாலத்தைக் கட்டாமல் ஆளும் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்திவருகிறது. எனவே நாங்கள் கட்டுமானப் பொருட்களை பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் ஒப்படைப்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தினோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: ரூ. 532 கோடி வரி ஏய்ப்பு - ஒத்துக்கொண்ட வேலம்மாள்!