புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று (ஜன.24) நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான், வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ’டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தபோது தேர்தல் பரப்புரைக்கு வருவதாக ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார். தேர்தலுக்கு முன்பு மூன்று முறை பரப்புரைக்கு வருவதாக தெரிவித்தார். புதுச்சேரி மாநிலம் மீது ராகுல்காந்திக்கு பற்று உள்ளது.
பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி, கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதைக் கேட்காமல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பாஜகவினர் எரிக்கின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது. மதவாத கட்சி என்பதால் பாஜகவை புதுச்சேரியில் இருந்து விரட்டி அடிப்போம்.
ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஜனவரி 26ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். வரும் தேர்தலில் மக்கள் பாஜகவை புறக்கணிப்பார்கள். அவர்களோடு கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்’ என்றார்.
இதையும் படிங்க:'நேதாஜியை காங்கிரஸ்தான் கொன்றது' - பாஜக எம்பி!