ஒடிசா சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பிஷ்ணு சரண் சேதி, அரசு குடியிருப்புகள் வழங்கப்படாததால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களைத் தனியே விட்டுவிட்டு புவனேஸ்வரில் துறவியைப் போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மிகச்சிறிய அறையே தற்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தங்கள் குடும்ப உறுப்பினர்களை புவனேஸ்வருக்கு அழைத்து வரமுடியாமல் தாங்கள் தவித்து வருவதாகவும், முதலமைச்சரின் அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டுமே குடியிருப்புகளை எளிதில் பெற்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தனது பாடலின் வழியே அவையில் சபாநாயகரின் குறுக்கீட்டை விமர்சித்த சேதி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் அவலநிலையை சரிசெய்ய இயலாத அரசு எவ்வாறு குடியிருப்புகளற்று அவதியுற்றுவரும் வெகுஜன மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேதியின் உரையைத் தொடர்ந்து, தங்களுக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்காத நாடாளுமன்ற விவாகார அமைச்சர் இக்ரம் அனுகாவை சாடும் விதத்தில் அவையிலிருந்த மற்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய தொழிற்துறையில் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் - விரைவில் ஆய்வு