சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் உட்பட மாநிலத்தின் மூத்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . மத்திய அமைச்சர் முன்னிலையில் மிஸ்டு கால் மூலமாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டனர்.
பின்னர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரஜன் பேசுகையில், "ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தினார். தேர்தலில் காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்தது. அவரால் அவரது கட்சியில் கூட தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. பாராளுமன்றத்தில் பாஜக மூலம் புறநானூறு பாடலோடு எப்படி தமிழ் ஒலித்ததோ அதே போல் தமிழ்நாட்டில் பாஜக குரல் ஒலிக்கும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இன்றைய தினம் மிக முக்கியமான தினம், பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் வாரணாசியிலும், என் தலைமையில் தமிழ்நாட்டில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன். பாஜக தொண்டர்களின் கட்சி, குடும்ப கட்சி அல்ல. பாஜக வித்தியாசமான கட்சி. மற்ற கட்சிகளுக்கு அவர்களது குடும்பம்தான் பிராதானம். ஆனால் பாஜகவிற்கு தேசமே பிரதானம்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறினால் மம்தா பானர்ஜி கைது செய்ய உத்தரவு இடுகிறார். ஆனால் நாங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று உரக்க கூறுவோம். மம்தாவால் என்ன செய்து விட முடியும். இந்தியா இறையாண்மை கொண்ட நாடு, பாஜக யாரையும் பிரித்து பார்க்க வில்லை. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும், கேரளத்திலும் வெற்றி வாய்ப்பை எட்டுவோம்" என்றார்.