உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு முக்கிய அரசியல் கட்சியான பாஜக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏழு முக்கியத் தலைவர்களை இழந்துள்ளது. கட்சியை நிறுவிய வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமானார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அதேபோல் பாஜக மூத்த தலைவரும் தில்லி முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானாவும் சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான பால்ராம்ஜி தாஸ் டாண்டனும் கடந்த ஒருவருடத்திற்குள் மரித்துள்ளனர்.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்தாண்டு மார்ச் மாதமும், 18 நாட்கள் வித்தியாசத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும் காலமானார்கள். இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அதிரடி முடிவுகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்திருந்தாலும், கட்சியின் முக்கிய தலைவர்கள் இல்லாதது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் இறந்த அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் கட்சியின் பல போராட்டங்களில் ஈடுபட்டு, முக்கிய இடங்களை அடைந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் இழப்பு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.