பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று (அக்.28) நடைபெற்றது. இந்நிலையில், பாஜக, லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சி அமைக்கப் போவதாக சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வளர்ச்சியை விரும்புபவர்கள் பாஜக-லோக் ஜனசக்தி பரிஷத் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். இந்தக் கூட்டணியால் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து ஊழலை ஒழிக்க முடியும். மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மக்கள் இந்த முறை வாக்களித்துள்ளனர். கட்சி வேட்பாளர்கள் எனக்கு அளித்த தகவலின்படி நவம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு நிதிஷ்குமாரால் முதலமைச்சர் பதவியில் தொடர முடியாது.
பாஜக லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகளே கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளனர். பஞ்சாபில் நடைபெற்ற தசரா திருவிழாவின்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது குறித்து ராகுல்காந்தி தெரிவித்ததற்கு நிதிஷ்குமார் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் ராகுல் காந்தி குறித்து நிதிஷ்குமார் ஏன் விமர்சிப்பதில்லை? ராகுல்காந்திக்கும் நிதிஷ்குமாருக்குமிடையே என்ன தொடர்பு உள்ளது" என்றார்.