ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், சில மாதங்களிலே ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை பாஜக மீண்டும் நிலை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே, ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள ஆழ்வர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜிதேந்திர சிங்கை விட, பாஜக வேட்பாளர் பாலக் நாத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 24 இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. தற்போது, 2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிகை நடைபெற்றுவரும் நிலையில், ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளதால், அங்கு மீண்டும் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.