டெல்லி வன்முறை நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வன்முறையில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவருமாறு காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக களமிறங்கவிருக்கும் பெர்னி சான்டர்ஸ் டெல்லி வன்முறை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "200 மில்லியன் இஸ்லாமியர்கள் இந்தியாவை தங்களது தாய் வீடாக கருதுகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கும்பல் இதுவரை 27 பேரை படுகொலை செய்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அது, அவர்களது பிரச்னை என இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இது மனித உரிமைகளுக்கு தலைமை வகிப்பவர்களுக்கான தோல்வி" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசியச் செயலாளர் சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடுநிலைமையோடு இருக்கவே முயற்சி செய்கிறோம். ஆனால், இதுபோன்ற கருத்து தெரிவிப்பதன் மூலம் அமெரிக்க தேர்தலில் தலையிட வற்புறுத்தப்படுகிறோம்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க குழு டெல்லி கலவரத்தை அரசியலாக்குகிறது - வெளியுறவுத்துறை