உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் ஒன்று எழுந்தது. தன்னை ஓராண்டுக்கும் மேலாக சின்மயானந்த் பாலியல் ரீதியாகத் தொல்லை செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்ற கண்காணிப்பில் அமைக்கப்பட்டது.
அக்குழு இன்று காலை 9 மணியளவில் சின்மயானந்தை கைது செய்தனர். கைதான மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். வழக்கு தொடர்பாகக் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், ஊழியர்களை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டது.
சின்மயானந்த் எதிராக 43 வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் ஒன்று சிறப்பு புலனாய்வு குழுவிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சின்மயானந்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஏற்கனவே, உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகியுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சட்டக் கல்லூரி மாணவி கண்டுபிடிப்பு; சின்மயானந்த் வழக்கில் திடீர் திருப்பம்?