மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சரத் பவார், 'கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை திடீர் அரசியல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. 10-11 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அஜித் பவார் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் இந்த செயல் கட்சி விதிமுறைகளை மீறிய நடவடிக்கை.
அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தை மனதில் கொள்ள வேண்டும்' என்றார்.
பின்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், 'பாஜகவின் செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது. அதிகாரத்தில் இருக்கும் பாஜக, நாற்காலியை தக்கவைக்க மிக மோசமான அளவிற்கு தரம் தாழ்ந்து செயல்படுகிறது. கட்சிகளை உடைத்து ஆட்சி நடத்தும் ஜனநாயக விரோத செயலில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது. நாங்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளோம். இச்செயலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். முடிந்தால் சிவசேனாவை உடைக்க பாஜக முயற்சி செய்து பார்க்கட்டும். அப்போது, மகாராஷ்டிரா தூங்கிக்கொண்டு இருக்காது' என கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், அதிகாலையில் அவசர அவரசமாக பதவியேற்று மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.