பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், இதற்கு தமிழ்நாட்டிலுள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து இந்த இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டில் பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த மசோதாவை நிறைவேற்றவில்லை.
மேலும் இதுதொடர்பான வருமானச் சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. இதனால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவரால் வருமானச் சான்றிதழைப் பெற முடியவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைவருக்கும் பயன்தரும் வகையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் கே.டி. ராகவன் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “தமிழ்நாடு அரசு இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், மத்திய அரசு வழங்கும் இடஒதுக்கீட்டில் இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை மாநில அரசு ஏன் தடுக்க வேண்டும். இது வருங்காலத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை வெகுவாகப் பாதிக்கும். நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றாதது அரசியலமைப்புக்கு எதிரானது” என்றார்.