மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. மாநிலத்தின் முக்கிய கட்சிகளான பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக மக்களவைத் தேர்தலின்போதே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், "பாஜகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திக்க உள்ளோம். கூட்டணி குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 144 தொகுதிகளில் பாஜகவும், 124 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், துணை முதலமைச்சர் பதவி சிவசேனாவுக்கு ஒதுக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்தான அறிவுப்பு நாளை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.