பெங்களூரு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி வியாழக்கிழமை (அக்.29) அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு, பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன் இருந்த தொடர்பு குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டார். பினீஷ் அமலாக்கதுறை அலுவலர்கள் முன் ஆஜராக இது மூன்றாவது முறையாகும்.
அவரிடம் மண்டல அலுவலகத்தில் விசாரணை நடப்பதாக அமலாக்கத்துறை இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை, போதைப் பொருள் குற்றம் சாட்டப்பட்ட முகமது அனூப் உடனான நிதி பரிவர்த்தனை தொடர்பாக பினீஷை சுமார் ஒரு மணிநேரம் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஒரு முக்கிய குற்றவாளிக்கும் பெங்களூரு போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஒரு பிரதான குற்றவாளிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்தக் குற்றஞ்சாட்டுகளை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். முன்னதாக இந்திய முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவு தலைவர் பினீஷ் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிலிருந்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கும்நிலையில், கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் ஆஜர் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: கேரள முதலமைச்சரின் தொடர்பு விரைவில் வெளியாகும்!