சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் இன்று காலை மும்பையில் இருந்து கொச்சி விமானநிலையம் வந்தடைந்தார். இவருடன் 6 பெண்களும் வருகை தந்திருந்தனர். மேலும் இவர்களை கடந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்த இரு பெண்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த பிந்து அம்மினி வரவேற்றார்.
பின்னர் அவர்களுடன் இணைந்து இன்று சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்த பிந்து அம்மினி, உரிய பாதுகாப்பு அளிக்கும்படி காவல் துறையின் பாதுகாப்பு கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றார். சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குவிந்த சிலர் திருப்தி தேசாய் குழுவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருவர், பிந்து அம்மினி மீது மிளகாய் மற்றும் மிளகு ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருப்தி தேசாய் குழுவினர் அளித்த புகாரின் பேரில் மிளகாய் ஸ்பிரே அடித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து பிந்து அம்மனி அங்குள்ள மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் ஆணையர் அலுவலக வளாகத்திலேயே பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...