தர்பங்கா: 10 நிமிடம் தாமதமானதால் பிகாரைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.
இதுகுறித்து மாணவர் சந்தோஷ் குமார் யாதவ் கூறியதாவது: 'தர்பங்காவிலிருந்து சனிக்கிழமை (செப்.12) காலை 8 மணிக்குப் பேருந்து ஏறினேன். அங்கிருந்து முஷாஃபர்பூர் - பாட்னா இடையே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 6 மணி நேரம் வரை வீணானது. பின்னர், பாட்னா நகரிலிருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 1 மணிக்கு கொல்கத்தாவைச் சென்றடைந்தேன்.
அதன் பிறகு டாக்ஸி பிடித்து தேர்வு மையத்துக்கு 1.40 மணிக்குச் சென்றேன். 10 நிமிடம் தாமதமானதாகக் கூறி, என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை' என்றார்.
மேலும், 'நான் தேர்வு நடப்பதற்கு இரு நாள்கள் முன்பிருந்தே பேருந்தில் டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்தேன். ஆனால், எனக்குத் தேர்வுக்கு முந்தைய நாளில் தான் டிக்கெட் கிடைத்தது.
தற்போது தேர்வு எழுதாததால் ஒரு ஆண்டினை இழந்துள்ளேன். அடுத்த ஆண்டு தேர்வுக்காக தயாராகும் பணியைத் தற்போது இருந்தே தொடங்க வேண்டும்' என்று கூறினார்.
இந்த சம்வத்தைத் தொடர்ந்து, ஷாஷ்வத் ஆனந்த் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'எதிர்பாராதவிதமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்காக தேர்வு அலுவலர்கள் மறுதேர்வு வைக்க வேண்டும் .
இதுபோன்ற தேர்வுகளை தவறவிடாமல் இருப்பதற்காக உணவு, தங்குமிடம், போக்குவரத்து தொடர்பான வழிமுறைகளில் தளர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'மருத்துவர் என்ற முறையில் மத்திய அரசை எச்சரிக்கிறேன்' - திமுக எம்பி செந்தில் குமார்