ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி உள்பட ஒன்பது பேரை கொன்ற வழக்கில் பிகார் தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை 56 வயதான மக்சூத் ஆலம் என்பவர் வாராங்கல் கோரெகுந்தா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்தார்.
இவரின் மகளை சக குடிபெயர் தொழிலாளியான பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான சஞ்சய் குமார் யாதவ் காதலித்துவந்துள்ளார்.
இந்தக் காதலுக்கு ஆலமின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆலம் பணிபுரிந்த தொழிற்சாலையில் பிறந்தநாள் நிகழ்ச்சியொன்று நடந்துள்ளது.
இதில் கலந்துகொண்ட சஞ்சய் தூக்க மாத்திரை கலந்த உணவை ஆலம் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளான். இதை உண்ட ஆலம், அவரது மனைவி, மகள், இரு மகன்கள், 3 வயதான ஆலமின் பேத்தி மற்றும் சக குடிபெயர் தொழிலாளிகளான பிகார் மற்றும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை அருகில் இருந்த கிணற்றில் ஒருவர் பின் ஒருவராக சஞ்சய் தூக்கி வீசியுள்ளான். பின்னர் அங்கிருந்து ஏதும் நடக்காதது போல் சென்றுவிட்டான்.
இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக ஆலமின் உறவுக்கார பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தக் கொலை வழக்கு குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்தக் கொலையில் சஞ்சயை காவலர்கள் நெருங்கியுள்ளனர். அதற்குள், முதல் கொலையில் இருந்து தப்பிக்கும்முனைப்பில் எட்டு கொலைகளை தொடர்ச்சியாக அறங்கேற்றியுள்ளான் சஞ்சய். வழக்கு விசாரணையில் இந்தத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சஞ்சய் குமார் யாதவ் வாராங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மே 21ஆம் தேதி சரணடைந்தான்.
இந்த வழக்கில் காவலர்கள் ஜூலை 28ஆம் தேதி குற்றபத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சஞ்சய் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 449 (அத்துமீறி நுழைதல்), 328 (போதைப்பொருள் பிரயோகம்), 380 (கொள்ளை, ஆவணங்கள் திருட்டு), 404 (நம்பிக்கை துரோகம்), 302 (கொலை), 366 (கடத்தல், பெண்ணை பலவந்தப்படுத்தல்), 425 (சேட்டை, துன்புறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை வாரங்கல் (புறநகர்) மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் குமார் யாதவ்வுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது இளைஞரான சஞ்சய் குமார் யாதவ் பிகார் மாநிலம் பெகுசாரை மாவட்டத்தில் உள்ள நூர்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு முழுக்க நீதிமன்றங்கள் பூட்டப்பட்டு, பணிக்கு திரும்பிய நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த 36 நாள்களுக்குள் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வாரங்கல் படுகொலை வழக்கில் பிகார் தொழிலாளிக்கு மாவட்ட நீதிமன்றம் உச்சப்பட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “திருநங்கைகள் கொலை குறித்து பேச ஆளில்லை”- வருந்தும் கிருபா