பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 15) நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, பாஜகவின் சுஷில் குமார் மோடிக்கு துணை முதலமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தார்கிஷோர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம், கத்தியார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தார்கிஷோர் பிரசாத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரசாத் கூறுகையில், "எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்படுவேன்" என்றார். இந்நிலையில், சுஷில்குமார் மோடிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.