பிகாா் மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்புப் பணிகளில் 19 குழுக்களாகப் பிாிந்து, தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி மதுரேஷ் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் மீட்கப்பட்டார். தற்போது அவா்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்.
கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 போ் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை. அவர்கள் நீரில் சிக்கி, பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதுகாப்புப்படை நான்காயிரத்து 945 பேரை மீட்டுள்ளது. அவா்கள் அரசு அமைத்துள்ள 45 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களை சந்தித்த எதிா்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், “சிலமணி நேர மழை, அரசு மற்றும் முதலமைச்சரின் (நிதிஷ் குமார்) வாயை அடைத்துவிட்டது” என்றார்.
ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். மக்களுக்கு பிகார் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? வெள்ள பாதிப்புக்கு தாா்மீக பொறுப்பேற்று நிதிஷ்குமாா் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் சிங் வலியுறுத்தினார்.

இது குறித்து பிகாா் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்குப் போதிய நிவாரண உதவிகள் செய்யப்பட்டுவருகிறது. கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தை ஒரு கைகளால் தடுக்க முடியாது” என்றார்.
ஏற்கனவே, பாட்னா ராஜேந்திரா நகர் வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கிடையில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வானிலை அறிக்கையில், அஸ்ஸாம், மேகலாயா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் (கிழக்கு), ராஜஸ்தான் (மேற்கு), ஜாா்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சாிக்கப்பட்டுள்ளது.