பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிகார் மாநில துணை முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சுஷில் குமார் மோடிக்கு வியாழக்கிழமை (அக்.22) மதியம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மாநிலத் தலைநகர் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து சுஷில் குமார் மோடி ட்வீட்டரில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனாலும் நலமுடன் உள்ளேன். கடந்த இரு நாள்களாக உடலின் வெப்பநிலையில் மாற்றம் உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் என்னை கவனித்து வருகின்றனர். சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டதில், நுரையீரலுக்கு பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது. விரைவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்.18) போஸ்புரி மாவட்டத்தின் பக்ஸாரில் நடந்த தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன், சுஷில் குமார் மோடியும் கலந்துகொண்டார்.
மாநிலத்தில் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. வாக்குகள் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பிகாரில் இதுவரை இரண்டு லட்சத்து 8 ஆயிரம் பேர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 208 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகியுள்ளனர். உயிரிழப்பு 1,019 ஆக உள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் பிகார் தேர்தல்; கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிதிஷ் குமார்!