பிகார் மாநிலம் தரபங்கா தொகுதியிலிருந்து பாஜக எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுனில் குமார் (66). இவருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை மோசமானது. இதையடுத்து இவருக்கு கோவிட்-19 பரிசோதனை நடந்தது.
இதில் சுனில் குமார் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் கடந்த 13ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே சுனில் குமாருக்கு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த குறைபாடுகள் இருந்தன. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சுனில் குமார் இன்று (ஜூலை22) உயிர் இழந்தார். சுனில் குமாருக்கு மனைவி, மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். பிகார் மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு உயிரிழந்த முதல் சட்டப்பேரவை உறுப்பினர் சுனில் குமார் ஆவார்.
மாநிலத்தில் அமைச்சர் வினோத் குமார் சிங், பாஜக எம்.எல்.ஏ. ஜிபேஷ் குமார் மிஸ்ரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சங்கர், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ. ஷாநவாஸ் ஆலம், ஜனதா தளம் எம்.எல்.சி. காலித் அன்வர் ஆகியோரும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு