பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இத்தேர்தலில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக லோக் ஜனசக்தி பரிஷத் கட்சி போட்டியிட முடிவெடுத்துள்ளது. இருப்பினும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கப்போவதில்லை எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான நட்சத்திரப் பரப்புரையாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
30 பேர் கொண்ட பட்டியலில், கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்ருகன் சின்ஹா, குலாம் நபி ஆசாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், சச்சின் பைலட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில், 70 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.