இந்தாண்டு இறுதியில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பதால் அது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய தேசிய லோக் தள் கட்சியுடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சி கடந்த வாரம் தொகுதிப் பங்கீடு காரணத்தை முன்வைத்து முறித்துக்கொண்டது.
2014ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 90 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி முதன்முறையாக ஆட்சி அமைத்தது. இதையடுத்து, பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சிபுரிந்துவருகிறார்.