இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் தற்போது உள்நாட்டு விமான சேவை படிப்படியாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிக அளவில் வரும் ஒரு இடமாக விமான நிலையம் உள்ளது. இதனால் விமான நிலையம் முழுவதும் அவ்வப்போது கிருமிநாசினிகள் தெளித்துச் சுத்தப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் விரைவாகக் கிருமிநாசினிகள் தெளிக்கும் இயந்திரங்களின் விலை அதிகம் என்பதால் சிறு விமான நிலையங்கள், இந்தச் சிக்கலைக் களைய புதுப்புது யோசனைகளை உருவாக்குகின்றன.
அதன்படி, ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள பூந்தர் விமான நிலைய அலுவலர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் விமான நிலையத்திலிருந்த தேவையற்ற பொருள்களைக் கொண்டு சானிடைசர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு அலுவலராக இருக்கும் ஆர்.பி. ஸ்ரீவஸ்தவா, இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த சானிடைசர் இயந்திரத்திரத்தில் ஒரு சமயத்தில் அதிகபட்சமாக ஆயிரம் லிட்டர் கிருமிநாசினிகளை வைத்துக்கொள்ள முடியும்.
மேலும், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி 25 அடி தூரம்வரை கிருமிநாசினிகளைத் தெளிக்க முடியும். இதன்மூலம் வெறும் இரண்டு மணி நேரத்தில் மொத்த விமான நிலையத்தை முற்றிலும் சுத்தம்செய்ய முடியும்.
பொதுவாக சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் இந்த இயந்திரத்தை வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள பூந்தர் விமான நிலைய அலுவலர்களைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: மாநிலங்களின் கெடுபிடியால் விமான சேவை மந்தம்!