காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அவருடன் 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ.க்கள்) விலகினர். இவர்கள் தற்போது பாஜக ஆதரவில், பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைச் சந்திக்க கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்ற திக் விஜய் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை காவலர்கள் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச பாஜக அலுவலகத்தை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக புகார் அளித்துள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் விலகிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கவிழும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ம.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க திக்விஜய சிங் இறுதி முயற்சி