ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் புதிதாகத் தயாரித்துள்ள இன்ட்ராநாசல் தடுப்பூசியின், முதல்கட்ட பரிசோதனை வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளனர். இந்தத் தடுப்பூசி மூக்கில் விடப்படும் சொட்டுகளின் வடிவத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்ட்ராநாசல் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புச் சக்தி, பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்ட்ராநாசல் தடுப்பூசியின், முதல்கட்ட பரிசோதனை வரும் பிப்ரவரி-மார்ச் மாதம் தொடங்குகிறது. ஒருவருக்கு ஒரு துளி தடுப்பூசி போதுமானது கிடையாது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா தவிர அனைத்துச் சந்தைகளிலும் இன்ட்ராநாசல் தடுப்பூசி விநியோகிக்கும் உரிமையை பாரத் பயோடெக் கொண்டுள்ளது.